தவக்கால ஒறுத்தல் முயற்சிகள்

01. அன்றாடத் திருப்பலி: இத்தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை உட்கொள்வோம்!

02. நற்கருணை ஆண்டவரோடு உறவாடுதல்: நேரம் கிடைக்கும் போது (இயன்றால் ஒவ்வொரு நாளும்) நற்கருணை ஆண்டவரைச் சந்தித்தல்.

03. மன்னிப்பு வழங்குதல்: மனத்தாங்கல் உள்ளோரை மன்னித்து, அன்புடன் பழகுதல்.

04. இறையோடு நல்லுறவு: ஒப்புரவு அருட்சாதனத்தை (பாவசங்கீர்த்தனம்) அடிக்கடி பெறலாம்.

05. திருவிவிலியம் வாசித்தலும், வாழ்தலும்: இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் விவிலியம் வாசிப்பதுடன், அதன்வழி வாழப் பழகுவோம்!

06. செபமாலை: ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லுதல்.

07. குடும்ப செபம்: குடும்பமாக இரவுச் செபம் சொல்ல ஆரம்பிக்காதவர்கள் இக்காலம் முழுவதும் சொல்ல முயற்சித்தல். கூடிச் செபிக்கும் குடும்பம் கூடியே வாழும்.

08. ஆண்டவரின் திருப்பாடுகளைத் தியானித்தல்: வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் திருப்பாடுகளை விவிலியத்தில் வாசித்து, தியானித்து, செபிப்போம்.

09. திருப்பாடுகளின் தியானத்தின் வழி ஆறுதலும், நம்பிக்கையும்: துன்ப துயரத்தில் இருக்கையிலும், நோயில் வாடும்போதும் இயேசுவின் திருப்பாடுகளைத் தியானித்து, ஆறுதலும் நம்பிக்கையும் அடைதல்.

10. சிலுவைப் பாதை: வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதையை செபித்தல் (பெரிய சிலுவைப்பாதை). முடிந்தால் ஒவ்வொரு நாளும் சுருக்கமான சிலுவைப்பாதை சொல்லுதல்.

11. உணவொடுக்கம்: சாம்பல் புதன் அன்றும், பெரிய வெள்ளி அன்றும் ஒருசந்தி (ஒருபொழுது உணவு துறப்பு) மற்றும் சுத்த போசனம் (அசைவ உணவு துறப்பு) கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவக்காலத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் சுத்தபோசனம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முடிந்தால் தவக்கால வெள்ளிக்கிழமைகளிலும், அல்லது தவக்காலம் முழுவதுமே ஒருசந்தி மற்றும் சுத்த போசனம் கடைபிடிக்கலாம்.

12. நேர மேலாண்மை: கிடைக்கும் நேரத்தை கணப்பொழுதும் வீணாக்காமல் ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படுத்துதல்.

13. தாழ்ச்சி: ஆணவத்தை அகற்றி தாழ்ச்சியோடு இருத்தல்.

14. எளிமையே வலிமை: எளிமையைக் கடைபிடித்து. ஆடம்பரமான உடை, நகை, அழகு சாதனங்களை அகற்றுதல்.

15. தன்னொழுக்கமும், புலனொடுக்கமும்: திரைப்படம் பார்த்தல், தொலைக்காட்சி நாடகம் பார்த்தல், ஆபாசமான நிகழ்ச்சிகள், பாடல்கள், புத்தகங்கள், படங்கள் பார்த்தல்/வாசித்தல், குடிப்பழக்கம், புறணி பேசுதல், கெட்ட வார்த்தை பேசுதல், வதந்தி பரப்புதல், கோபம் கொள்ளல், எரிச்சல் படுதல் இவற்றை அறவே நிறுத்தி, நமதாண்டவருக்கு நம்மாலான ஆறுதலைத் தருதல்.

16. தானம் செய்தல்: கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதியை இறைப்பணிக்கு செலவு செய்தல்.

17. தர்மம் செய்தல்: காலை, மாலை, நண்பகல் உணவுகளுக்கிடையே பயன்படுத்தப்படும் குளிர்பானம், தேனீர், சிற்றுண்டி முதலியவற்றைத் தவிர்த்து, இதனால் மிச்சமாகும் பணத்தைச் சேமித்து, ஏழைகளின் பசிப்பிணி போக்குதல்.

18. நோயாளிகளுக்கு ஆறுதல்: நோயாளிகளைச் சந்தித்து, ஆறுதல் சொல்வதுடன் அவர்களுக்காக வேண்டுதல்.

19. அமைதிக்காக: சமாதானக் குறைவுடன் வாழும் குடும்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தல், உலக அமைதிக்காக வேண்டுதல்.

20. பிறரன்புப் பணிகள்: ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்காவது நம்மாலான ஏதாவது சிறு உதவி செய்தல். ஏழைகளுக்கும், அந்நியருக்கும், அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் அடைக்கலமாகவும், ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருத்தல்.

21. வட்டி தவிர்த்தல்: அநியாய வட்டி வாங்காமலும், பிறரைத் துன்பத்திற்கு உள்ளாக்காமலும் இருத்தல்.

22. மீளாய்வு: ஒவ்வொரு நாளும் இரவில் தன்னைத்தானே ஆய்வு செய்துகொண்டு, ஆண்டவரின் பேரன்பிற்காகவும், இரக்கத்திற்காகவும் மன்றாடுதல்.

23. துயரங்களைச் சகித்தல்: நமக்கு வரும் துன்பங்கள், கஷ்டங்களை அமைந்த மனத்தோடு ஏற்று, நம்முடைய பாவங்களுக்காகவும், பிறரின் பாவங்களுக்காகவும் அவற்றை கல்வாரி நாயகனின் சிலுவைப்பாடுகளோடு ஒப்புக்கொடுத்தல். நமக்குப் பிடிக்காத விசயங்கள் நமக்கு நடக்கும்போது அதை அமைந்த மனதுடன் முணுமுணுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதும் மிகப்பெரிய ஒறுத்தலே.

24. மனவல்ய செபம்: மனவல்ய செபத்தை அடிக்கடி சொல்லுதல். உதாரணமாக: "இயேசுவே, என் மேல் இரக்கமாயிரும்!"

"இயேசுவே நான் பாவி. இயேசுவே! உம் இரத்தம் என்னைக் கழுவட்டும்; உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்."

"இயேசுவே, உம் தழும்புகளால் நான் குணமாகிறேன், நன்றி!"

"இயேசுவே, தாவீதின் மகனே, பாவி என்மீது இரக்கம் வையும்!"

"என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்க்காகவும், உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன்.“

"இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்."

"இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! என் இருதயத்தை தேவரீருடைய இருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்."