இறை இரக்கத்தின் பக்தி: வரலாறு

இறை இரக்கத்தின் பெருவிழா சில காலமாக போலந்து நாட்டிலும், வத்திக்கானிலும், மேலும் பல இடங்களிலும் தனிப்பட்ட வழிபாடாகவே கொண்டாடப்பட்டு வந்திருந்தது.

இறை இரக்கத்தின் விழாஉணர்வுப்பூர்வமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும் எனவும், அவ்விழா ஒவ்வொரு பாஸ்கா ஞாயிறுக்குப் பின் வரும் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்பட வேண்டும் எனவும் நிறைய தருணங்களில் அருட்சகோதரி பவுஸ்தீனாவிடம் இயேசு கூறியிருந்தார்.

அருட்சகோதரி பவுஸ்தீனாவை புனிதையாக பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியில், 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், பாஸ்கா விழாவுக்கு அடுத்த ஞாயிறை இறை இரக்கப் பெருவிழா நாளாக அகில உலக திருச்சபைக்கும் அறிவித்தார்.

அருட்சகோதரி தூய பவுஸ்தீனாவின் நாட்குறிப்பேடு வழியாக இயேசு உரைத்தவை:

ஆண்டவர் ஏறக்குறைய 14 தடவைகளுக்குமேல் இவ்விழாவின் வெளிப்பாடு பற்றி அருட்சகோதரியைக் கேட்டுக் கொண்டுள்ளார். (கையேடு பகுதிகள் 49, 88, 89, 280, 299, 341, 420, 570 ,699, 742, 1109) . மேலும் ஒரு சந்தர்ப்பத்தில்: இந்தப் பணிக்காக உன்னால் முடிந்தளவு முயற்சி செய். இவ்விழாவில்தான் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (கையேடு 1109).

தூய பவுஸ்தீனா இப்பகுதியை முடிக்கும்போது "ஆண்டவரின் இக்கேள்வியை தடுக்க யாராலும் முடியாதென நான் அப்பொழுதே புரிந்து கொண்டேன்" என எழுதுகிறார்.

01. "எவராவது இறை இரக்கப் பெருவிழா நாளில் வாழ்வின் இவ்வூற்றை அண்டி நெருங்கி வந்தால் அவருக்கு தண்டனைத் தீர்ப்பிலிருந்தும், கடினபாவத்திலிருந்தும் முழுமையான மன்னிப்பு அருளப்படுவார்." (கையேடு 300)

02. "பாஸ்காவுக்கு அடுத்த முதல் ஞாயிறு (இறை இரக்க ஞாயிறு) இறை இரக்க உருவப்படத்தை அதிகாரப்பூர்வமாக ஆசீர்வதித்து வெளிப்படுத்தப்படுவதோடு, ஒவ்வொரு ஆன்மாவும் இதைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளக்கூடியதாக விளக்கம் கொடுத்து, பகிரங்கமாக பெருமதிப்புக் கொடுக்க வேண்டும்." (கையேடு 341) .

03. "இறை இரக்கப் பெருவிழா எனது இரக்கத்தின் உள்ளாளத்திலிருந்து வெளிப்படும் அளவற்ற உணர்வு பூர்வமாண இரக்கத்தை உறுதிப்படுத்துகின்றது." (கையேடு 420) .

04."மகளே, எனது ஆழங்காண முடியாத இரக்கத்தைப் பற்றி முழு உலகத்திற்கும் எடுத்துக் கூறுவாயாக! இறை இரக்கப் பெருவிழா சகல ஆன்மாக்களுக்கும், குறிப்பாக கடின மன பாவிகளுக்கு அடைக்கலமும், பாதுகாவலும் ஆகும். அந்நாளில் எனது உள்ளாழத்திலிருந்து கனிவுள்ள இரக்க பெரு வெள்ள மடை திறக்கப்படுகின்றது. எனது இரக்கத்தின் ஊற்றை நெருங்கி வரும் ஆன்மாக்களுக்கு நிறைவான அருட்கடலைப் பொழிந்திடுவேன். இந்நாளில், உண்மையான மனமாற்றத்தோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக் கொண்டு, திருப்பலியில் பங்குபற்றி, திவ்விய நற்கருணையைப் பெற்றுக்கொள்ளும் எந்தவொரு ஆன்மாவுக்கும் கடினமான பாவத்திலிருந்தும், தண்டனைத் தீர்ப்பிலிருந்தும் முழுமையான மன்னிப்பு அருளப்படும். அந்நாளில், எனது தெய்வீக அருள்மடை வழியாக இறையருளருவி திறக்கப்படும். எந்தவொரு ஆன்மாவும், ஏன் கருஞ்செந்தூரம் போன்ற பாவம் செய்த ஆன்மாவானாலும் என்னை அண்டி வர அஞ்சத் தேவையில்லை. வானதூதர்களாலேயோ, மனுக்குலத்தவராலோ எங்கும், எக்காலத்திலும், எவ்வகையிலும் புரிந்து கொள்ள முடியாத அளப்பரியது இவ்விரக்கம். உயிர்வாழும் அனைத்தும் எனது உணர்வுப்பூர்வமான இரக்கத்தின் உள்ளாழத்திலேயே நிறைவடைகின்றது. என்னோடு நெருங்கி உறவாடும் எந்த ஆன்மாவும் முடிவில்லாக் காலத்திற்கும் எனது அன்பிலும், இரக்கத்திலும் நிலைத்திருக்கும். இவ்வதியுயர் பண்பிலேயே இப்பெருவிழா வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழா ஒவ்வொரு பாஸ்கா ஞாயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படவேண்டும் என்பதே என் விருப்பம். மனுக்குலம் எனது இரக்க ஊற்றண்டை நெருங்காவிட்டால் அமைதியை அடையவே முடியா".

05. "ஆம், ஒவ்வொரு பாஸ்கா ஞாயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறும் இறை இரக்கப் பெருவிழா. ஆயினும், உனது இரக்கச் செயல்களே என்னை அன்பு செய்வதை உண்மையாக வெளிப்படுத்தும். அவற்றையே நீ கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும் என ஆணை இடுகிறேன். நீ எப்போதும், எச்சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் உன் அயலவருக்கு இரக்கம் காட்ட வேண்டும். நீ அதிலிருந்து பின்வாங்கிக் கொள்ளவோ, அல்லது உனது இயலாமை என தவிர்த்துக் கொள்ளவோ கூடாது என உரிமையுடன் கேட்கின்றேன்." (கையேடு 742).

06. "இறை இரக்கப் பெருவிழா நாளில் உண்மையான மனமாற்றத்தோடு ஒப்புரவு அருட் சாதனத்தை பெற்றுக்கொண்டு திருப்பலியில் பங்கு பற்றி திவ்விய நற்கருணையைப் பெற்றுக் கொள்ளும் ஆன்மாவுக்கு கடின பாவத்திலிருந்தும் தண்டனை தீர்ப்பிலிருந்தும்; முழுமையான மன்னிப்பு அளிப்பேன். (கையேடு 1109) .

வாசல்