மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் "இறை இரக்கத்தின் தூதர்" என்றும் அழைக்கப்படுகின்றார்.
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1905-ஆம் ஆகஸ்டு 25-ஆம் நாள் போலந்து நாட்டின் க்ராகோவ் என்னுமிடத்தில் உள்ள க்ளோகோவெய்க் கிராமத்தில் பிறந்தார். அவருடைய பெற்றொர் ஏழையர். அவர் கன்னியர் மடத்தில் சேர விரும்பியும் பெற்றோர் மும்முறை அனுமதி மறுத்துவிட்டனர். இறுதியாக தனது 20-ஆம் வயதில் இறை இரக்க அன்னையின் சகோதரிகள் நடத்தும் துறவற சபையில் சேர்ந்தார். வார்சாவில் துறவறப் படிப்பை முடித்து விட்டு 1928-இல் முதல் வார்த்தைப்பாட்டைப் பெற்றார். போலந்திலுள்ள பல மடங்களில் தன் படிப்பு குறைவு (மூன்றாம் வகுப்பு வரை) என்ற காரணத்தால் பல தாழ்ந்த வேலைகளைச் செய்து மறைந்த வாழ்வு வாழ்ந்து, தாழ்ச்சிக்கும், கடின உழைப்புக்கும் உதாரணமாக விளங்கினார். 1931 பிப்ரவரி 22-ஆம் நாள் நம் மீட்பரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இந்த எளிய சகோதரிக்குத் தோன்றி, எல்லா மனித குலத்திற்கும் இரக்கமுள்ள ஒரு அருமையான நற்செய்தியைக் கொண்டு வந்தார். அருட்சகோதரி பவுஸ்தீனா இந்த தேதிக்கான அவரது நாட்குறிப்பில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
"இன்று மாலை வேளையில், நான் என் அறையில் இருந்தபோது, வெண்ணிற ஆடை அணிந்திருந்த ஆண்டவராகிய இயேசுவைக் கண்டேன். அவரது ஒரு கரம் ஆசீர்வதித்தபடி உயர்த்தியும், மற்ற கரம் மார்பின் ஆடை பகுதியைத் தொட்டபடியும் இருந்தது. மார்பு ஆடையின் திறப்பிலிருந்து இரண்டு பெரிய ஒளிக்கதிர்கள், ஒன்று சிவப்பு நிறத்திலும் மற்றது வெளிர் நிறத்திலும் வெளிவந்தன. நான் மௌனமாக ஆண்டவரைப் பார்த்த வண்ணம் அப்படியே ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். என் ஆன்மா பயம் கலந்த மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் இயேசு என்னை நோக்கி: ‘நீ இப்போது காணும் இத்திருவுருவத்தை, “இயேசுவே! நான் உம்மை நம்புகின்றேன்” என்ற சொற்களோடு அப்படியே வரைந்திடு.’ என்றார்."
இரக்கத்தின் அரசரான இயேசு இவருக்குப் பலமுறை காட்சி தந்தார். இக்காட்சிகள் 1930-இலிருந்து 1938 வரை நீடித்தன. இறை இரக்கத்தின் பக்தியைக் குறித்து இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினார். தமது வார்த்தைகளை பவுஸ்தீனா அவர்களின் கையேட்டில் எழுதிக்கொள்ளுமாறு பணித்தார். அவர்களது 600 பக்க நாட்குறிப்பிலிருந்த இக்குறிப்புகள் பின்னாளில் "Diary: Divine Mercy in My Soul" என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. ஏனெனில், தமது ஆன்ம குருவையும், மடத்தலைவியையும் தவிர வேறு எவருக்கும் இக்காட்சிகள் பற்றிய செய்தியை அவர் அறிவிக்கவில்லை. இந்நாட்குறிப்புகள் ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன், இஸ்பானியம், பிரஞ்சு, அரேபியம், இரஷ்யம், ரூமேனியம், செக், ஸ்லோவாக்கியம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சகோதரி மரிய பவுஸ்தீனா காச நோயால் பாதிக்கப்பட்டு மிகத் துன்புற்றார். தன்னுடைய துன்பங்களை பாவிகளுக்காக ஒப்புக்கொடுத்தார். தமது 33-ஆம் வயதில் க்ராகோவ் எனும் ஊரில் 1938-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். 1966-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மடத்தின் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது போலந்தில் கர்தினாலாக இருந்த கரோல் வைத்தீவோ (பின்னாளில் திருத்தந்தையான இரண்டாம் ஜான் பவுல்) 1968-இல் முக்திப்பேறு பட்டத்திற்கான அலுவலை ஆரம்பிக்க அனுமதி வழங்கினார். 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் சகோதரி மரிய பவுஸ்தீனாவை "முத்திப்பேறு பெற்றவர்" என அறிவித்தார். பின்னர் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலால், சகோதரி மரிய பவுஸ்தினாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார்.
அருட்பணி. ஸ்போக்கோ அவர்களிடம் தனது காட்சிகளை விவரித்தார் அருட்சகோதரி பவுஸ்தீனா. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவரை உளவியல் மருத்துவரிடம் அனுப்பி, அவர் நன்றாகப் பரிசோதனை செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார், அருட்பணி. ஸ்போக்கோ. ஆனால், அருட்சகோதரி பவுஸ்தீனா முழுவதும் நல்ல மனநலத்தோடு இருக்கிறார் என உளவியல் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிவித்தன. அதன்பின்னர், அருட்சகோதரி பவுஸ்தீனா மீது நம்பிக்கை வைத்து, அவரின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காட்சிகளில் கண்ட அனைத்தையும் எழுதுமாறும் அவர் ஊக்குவித்தார், அருட்பணி ஸ்போக்கோ. அந்த அருட்பணியாளர், தான் பணியாற்றிய அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கலைஞருமான Eugene Kazimierowski என்பவரை, 1934-ஆம் ஆண்டு சனவரியில் அருட்சகோதரி பவுஸ்தீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அச்சகோதரி விவரித்தது போன்றதோர் உருவப்படத்தை, அதே ஆண்டு ஜூனில் வரைந்து முடித்தார், Kazimierowski. இந்த இறை இரக்க இயேசுவின் திருவுருவப் படமே அருட்சகோதரி பவுஸ்தீனா காட்சியில் கண்ட இயேசுவின் உருவம் போன்றதாகும். இயேசு கேட்டுக் கொண்டபடியே அப்படம் மடத்து கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது.